search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் நிலையங்கள்"

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    மெட்ரோ ரெயில்களில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஷேர் கார், ஷேர் ஆட்டோ, சைக்கிள், எலக்ட்ரானிக் ஸ்கூட்டி போன்ற வசதிகள் அளிக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகள் அங்கிருந்து அலுவலகம், சென்று வரவும், தொடர் பயணங்களை மேற்கொள்ள வசதியாக இணைப்பு போக்குவரத்து வசதியினை வழங்கி உள்ளது.

    மெட்ரோ நிலையங்களுடன் ஸ்மால் பஸ், மாநகர பஸ்களை இணைத்துள்ளது. மேலும் பயணிகள் தங்கள் கார், இருசக்கர வாகனங்களை நிலையத்தில் விட்டு சென்று பயணம் செய்ய ‘பார்க்கிங்’ வசதியும் அளிக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியுள்ள காலி இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருசில ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கடுமையாக போட்டி ஏற்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் உள்ள நிலையங்களில் பார்க்கிங் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    ஒருசில இடங்களில் பயணம் செய்யாத அப்பகுதி வியாபாரிகள் ரெயில்வே இடத்தில் ‘பார்க்கிங்’ செய்து வருகின்றனர். கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் முறைப்படுத்த பார்க்கிங் கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் இதனை செயல்படுத்தியதில் ஒருசில குறைகள் இருப்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கண்டு பிடித்துள்ளது. அவற்றை சரிசெய்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது மாதம் அல்லது தினசரி அடிப்படையில் டோக்கன் முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.

    மெட்ரோ ரெயிலை பயன்படுத்தக்கூடிய பயணிகளுக்கு மட்டும் தான் பார்க்கிங் வசதி அளிக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடத்துக்கு அதிக போட்டி உள்ளது. பலர் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

    மெட்ரோ ரெயில் நெட்ஒர்க் அமைந்துள்ள 45 கி.மீ. தூர அளவில் 8000 வாகனங்கள் தினமும் பார்க்கிங் செய்யப்படுகின்றன. ஒருசில நிலையங்களில் வழக்கமாக வரும் பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது.

    மாதாந்திர பாஸ் வசதி பெற்றவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் ஊழியர்களிடம் மோதல் போக்கில் ஈடுபடும் நிலை உருவாகி வருகிறது.

    ஸ்மார்ட் கார்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த கார்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை உள்ளே கொண்டு வர முடியும். பார்க்கிங் பகுதியில் நிறுத்த முடியும். மற்றவர்கள் உள்ளே நிறுத்த முடியாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளை பஸ் நிலையம், புறநகர் மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களோடு இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதியினை ஒரு சில நிலையங்களில் அறிமுகம் செய்தது.

    கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, ஏ.ஜி-டி.எம்.எஸ்., அண்ணாநகர் கிழக்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதி நடைமுறையில் உள்ளது.

    இது தவிர பெடல் சைக்கிள் வசதி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு நிலையங்களிலும் ஆலந்தூர், கிண்டி நிலையங்களில் எலக்ட்ரானிக் பைக் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சைக்கிள் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகளை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் இன்னும் வசதிகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

    தற்போது 5 நிலையங்களில் மட்டும் ஷேர் கார் வசதி உள்ளது. இந்த வசதியை 32 நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் ஷேர் கார் வசதி அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது.

    ஷேர் கார் வசதியை பெற தனியாக ஆப் வசதியை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    ஒவ்வொரு நிலையத்திலும் 2 முதல் 6 கார்கள் வரை தேவையை பொறுத்து நிறுத்தப்படும். மீனம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் 2 கார்களும், சென்ட்ரல், ஆலந்தூர் நிலையங்களில் 4 அல்லது 6 கார் வரை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பயணிகளின் தேவையை பொறுத்து இது அதிகரிக்கப்படும். குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் ஷேர் கார் செல்லக்கூடிய வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆக உள்ளது. புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஸ்மால் பஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 16 ரெயில் நிலையங்களில் தற்போது ஸ்மால் பஸ் வசதி உள்ளது. அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாநகர போக்குவரத்து கழகத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பேசி வருகிறது.

    மெட்ரோ ரெயில் நேரம் 2 வாரத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில் ஓடும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- விமான நிலையம் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக 2 வாரத்துக்கு மெட்ரோ ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியதாவது:-


    சென்னை மாநகர பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 வார காலத்துக்கு அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் கூடுதல் காவலாளிகள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    அதிகாலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என அரைமணி நேரத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். அதன் பிறகு பீக் அவர்சில் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். அதன்பிறகு சாதாரண நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். ரெயில் நேரம் அதிகரிப்பு மூலம் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    2-வது கட்ட மெட்ரோ திட்டத்தில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் விபத்து, தற்கொலையை தடுக்க பாதுகாப்பு திரைக் கதவுகள் அமைக்கப்படுகிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை - சென்ட்ரல் வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி வரை 118 கி. மீட்டர் தூரத்துக்கு ரூ.69,180 கோடி செலவில் வழித்தடப்பாதை உருவாக்கப்படுகிறது. இதில் 80 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உயர்மட்ட பாதையிலும், 48 ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும் அமைக்கப்படுகிறது.

    புதிதாக அமைக்கப்படும் 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் விபத்து, தற்கொலையை தடுக்க பிளாட்பாரங்களில் பயணிகள் பாதுகாப்பு திரைக்கதவுகள் அமைக்கப்படுகிறது.

    இந்த திரைக்கதவுகள் அமைப்பதன் மூலம் தண்டவாள பகுதிக்கு பயணிகள் எளிதில் செல்ல முடியாது. தற்கொலை, விபத்துக்கள் தடுக்கப்படும்.

    மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஏ.சி., குளிர் காற்று சுரங்க தண்டவாள பகுதிக்கு வீணாக வெளியே செல்வது கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் மின்சார செலவு குறையும்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்புக்காக திரைக்கதவுகள் அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்டவாள பகுதிகளில் பயணிகள் தற்கொலை, விபத்துக்களை தடுக்க இந்த வசதி உருவாக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் குளிர்சாதன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்காற்று வீணாவது தடுக்கப்படும்.

    இதன் மூலம் குளிர் சாதனத்துக்கான மின்சார கட்டண செலவு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யும் வகையில் ரூ.2,500-க்கு மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டது.

    விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளுக்கு 90 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக கருத்து எழுந்தது.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தது. வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க ஸ்மார் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.



    அதன்பின் ஒருநாள் பயணம் அட்டையை அறிவித்தது. இதில் பயணத்துக்கு ரூ.100 முன் பணமாக ரூ.50 என ரூ.150 செலுத்தி அட்டை பெற்று ஒரு நாளில் எத்தனை முறையும் பயணம் செய்யலாம். அட்டையை ஒப்படைக்கும்போது முன் பணம் ரூ.50 திரும்பி கொடுக்கப்படும்.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2,500-யை செலுத்தி இந்த அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முன் பணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.

    இதில் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம். இந்த அட்டை அலுவலக வேலைக்கு செல்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain #MetroTrainPass
    சென்னை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது பொழுதுபோக்குவதற்காக பயணிகளுக்கு ஓடும் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை நெட் வொர்க் வசதி மார்ச் மாதம் முதல் வழங்கப்படுகிறது. #MetroTrain #WiFi

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளை கவருவதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

    தற்போது ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு பொழுதுபோக்கு வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓடும் மெட்ரோ ரெயிலில் இலவச வை-பை நெட்வொர்க் வசதியை வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது.

    இதற்கான மெட்ரோ ‘ஆப்’ பதிவை ‘ஸ்மார்ட்’ போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மெட்ரோ ரெயிலில் பயணிகள் ஏறியதும் ‘வை-பை’ வசதியை ஆன் செய்து நெட்வொர்க் வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

    ‘வை-பை’ வசதி மூலம் பிடித்த சினிமா, பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழியில் சினிமா படங்கள், பாடல்கள், டி.வி. நிகழ்ச்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

     

    சென்னை மெட்ரோ ரெயில் பயணத்தின்போது பொழுதுபோக்குவதற்காக பயணிகளுக்கு ஓடும் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை நெட்வொர்க் வசதி மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.

    இதன் மூலம் பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் எளிதில் சினிமா, பாடல், நாடகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை எளிதில் கண்டு களிக்கலாம்.

    நாட்டிலேயே முதல் முறையாக சென்னை மெட்ரோ ரெயிலில் தான் வை-பை நெட்வொர்க் வசதி தொடங்கப்படுகிறது.

    3 மெட்ரோ ரெயில்களில் சோதனை ஓட்டமாக வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஓடும் ரெயில்களில் ‘வை-பை’ வசதி வெற்றிகரமாக செயல்பட்டது.

    வருகிற மார்ச் மாதம் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை வசதி மூலம் பயணிகள் எச்.டி. தரத்தில் சினிமா பாடல்கள், சீரியல்களை கண்டு மகிழலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #WiFi

    மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் வைபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது. #MetroTrain #WiFi
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் பல இடங்களில் உயர்மட்ட பாதையாகவும், பல இடங்களில் சுரங்கப்பாதையாகவும் அமைந்துள்ளன.

    குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பதையில் மெட்ரோ ரெயில் ஓடுகிறது. விமான நிலையத்துக்கு முன்பும் சுரங்க பாதையில் செல்கிறது.

    வண்ணாரப்பேட்டை முதல் சின்னமலை வரையும் சுரங்கப்பாதையிலேயே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரெயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாக பயணிக்கின்றனர். அவர்கள் பயணத்தின் போதே தங்களின் லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களில் அலுவலக பணியை மேற்கொள்கின்றனர்.

    ஆனால் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் செல்லும் போது அவர்களுக்கு நெட் ஓர்க் வசதி கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வேலைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் வைபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது.

    இதன்மூலம் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் வைபை மூலம் தங்கள் பணிகளை எந்த தடங்களிலும் இன்றி செய்யலாம். மற்ற பயணிகள் வைபை மூலம் தங்கள் செல்போனில் பாடல் ரசித்துக் கொண்டும், ஆன்லைனில் இணைய தளத்தை பார்த்துக்கொண்டும் பயணிக்கலாம்.

    மேலும் மெட்ரோ ரெயில்களில் விரைவில் வழித்தட வரை படமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய வரைப்படம் அடுத்தத்தடுத்த ரெயில் நிலையங்களுக்கு ஏற்ப மாறும் வகையில் டிஜிட்டல் முறையில் அனுமதிக்கப்படுகிறது. வரும் மாதங்களில் இந்த டிஜிட்டல் வரைபடம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இதில் வர்த்தக விளம்பரமும் இடம்பெற செய்து மெட்ரோ ரெயிலின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய டிஜிட்டல் வரைபடம் 42 மெட்ரோ ரெயில்களிலும் பொருத்தப்படுகிறது. முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 35 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்ட விரிவாக்க பணிகளுக்காக கூடுதலாக 10 ரெயில்கள் வாங்கப்பட உள்ளன. #MetroTrain #WiFi
    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவை நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் தொடங்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம் - விமான நிலையம், சைதாப்பேட்டை- சென்ட்ரல் வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. வாடகை சைக்கிள் வாடகை கார், வாடகை ஆட்டோ வசதிகள் மெட்ரோ பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலும் புதிதாக மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக வாடகை ‘ஸ்கூட்டர்’ சேவையை ‘வோகோ’ நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் வாடகை ஸ்கூட்டர் சவாரியை மெட்ரோ ரெயில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். மொபைல் போனில் ‘ஸ்கூட்டர்’ ரெண்டல் ஆப் டவுன்லோடு மூலம் ஆரம்ப இடம், முடிவு இடம் பதிவிட்டு ஓ.டி.பி. எண் மூலம் இந்த வசதியை பெறலாம்.

    வாடகை ‘ஸ்கூட்டர்’ வசதியை உபயோகித்தப் பின்னர் ஸ்கூட்டரை ஒப்படைக்கும் போது கணக்கிட்டு பணம் செலுத்தலாம். ‘கியூ.ஆர்’ கோடு மூலமும் இந்த வசதியை பெற முடியும்.

    மெட்ரோ ரெயில் நிலைய வாடகை ஸ்கூட்டர் வசதி மூலம் பயணிகள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர்கள், வேலைக்கு செல்வோர்கள், வீடு, அலுவலகங்கள் செல்வோர் பெரிதும் பயன்பெறுவார்கள். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகள் வெகுவாக குறையும். #MetroTrain
    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகள் - பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் செல்ல வசதியாக ‘ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது.

    கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, செயிண்ட்தாமஸ் மவுண்ட் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஷேர் ஆட்டோ’ வசதிகள் உள்ளன.

    ஷேர் கார் வசதிகள் டி.எம்.எஸ், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ‘ஷேர் ஆட்டோ’, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் சென்றடைந்துள்ளனர். #MetroTrain
    மெட்ரோ ரெயில் பயணிகள், பொதுமக்கள், ஊழியர்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பல், கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. #MetroTrain

    சென்னை, டிச. 15-

    மெட்ரோ ரெயில் பயணத்தை பொதுமக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    கால்டாக்சி, ஆட்டோ வசதியினை மெட்ரோ ரெயில் நிலை யங்களில் அறிமுகப்படுத் தியது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல் மற்றும் கண் சிகிச்சை முகாமினை வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்துகிறது.

    பயணிகள், பொதுமக்கள், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பல், கண் சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    17-ந்தேதி அண்ணா நகர் கிழக்கு நிலையம், 18-ந்தேதி அண்ணா நகர் டவர் நிலையம், 19-ந்தேதி சைதாப்பேட்டை நிலையம், 20-ந்தேதி கிண்டி, 21-ந்தேதி விமான நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தி கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    பயணிகள் வசதிக்காக முக்கியமான நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, கார் வசதியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், பரங்கிமலை, சின்னமலை, கிண்டி ஆகிய 8 நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதியும், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர், ஏ.ஜி.டி.எம்.எஸ். ஆகிய 5 நிலையங்களில் ஷேர் கார் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் ஆட்டோவிற்கு ரூ.10, காருக்கு ரூ.15 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரூ.5 குறைக்கப்பட்டது. பொது மக்கள் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையம், நிறுத்தங்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் 33 ஆயிரத்து 866 பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

    ஷேர் ஆட்டோவில் 27,562 பயணிகளும், ஷேர் காரில் 6,304 பயணிகளும் பயணித்துள்ளனர். கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 8166 பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருமங்கலத்தில் இருந்து 4,995 பேர் பயணம் செய்தனர். ஆலந்தூர் நிலையத்தில் இருந்து 3,407 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    ஷேர் கார் வசதியை ஏ.ஜி.டி.எம்.எஸ். நிலையத்தில் இருந்து 1,715 பேர் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கோயம்பேடு நிலையத்தில் இருந்து 1,593 பயணிகள் காரில் பயணம் செய்துள்ளனர்.

    விழிப்புணர்வு, பண்டிகை காலங்களில் பாரம்பரிய போட்டிகள் நடத்தி பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. #MetroTrain
    கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை, ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலையங்களில் சூரிய சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. #SolarProject #MetroTrainStation
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர்- சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்டிரல், சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது.



    தொடர்ந்து உயர் மட்ட பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான மின்தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் கூடுதலாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக 1,120 கிலோ வாட் சக்தி கொண்ட மின் தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சத்து 49 ஆயிரத்து 152 சேமிக்க முடியும். இதனுடன் சேர்த்து சென்னை மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம், பணிமனை மற்றும் ரெயில் நிலையங்களில் 3 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4.6 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவையும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

    மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #SolarProject #MetroTrainStation
    ×